தேனி:தமிழக-கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகத்தின் தென் மாவட்டங்களான தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத் தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இந்த அணையின் முழு உயரம் 142 அடியாக உள்ளது. இந்நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது. இதன் காரணமாக முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முல்லை பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு சுமார் 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் சுருளி ஆறு பகுதிகளில் இருந்தும் காட்டுப் பாதைகளில் இருந்தும் வரும் மழை நீர் முல்லை பெரியாற்றின் கலந்து வருவதால் தற்போது அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றுப்படுகையில், தண்ணீர் பாலத்தை தொட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: போடி மெட்டு மலைச்சாலையில் மண்சரிவு: தமிழ்நாடு-கேரளா இடையே போக்குவரத்து பாதிப்பு!