நான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது தேனி: கூட்ட நெரிசலால் சபரிமலைக்குச் செல்ல முடியாத ஐயப்ப பக்தர், கடந்த 40 வருடத்தில் இது போன்ற கஷ்டங்களை அனுபவித்ததில்லை என கண்ணீர் மல்க கூறும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
கேரள மாநிலம் சபரிமலையில் கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இதையடுத்து, ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க தொடர்ந்து சபரிமலைக்குச் சென்று வந்தனர். இந்நிலையில், மகர விளக்கு பூஜைக்காக கடந்த டிசம்பர் 29ஆம் தேதி நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதற்காக ஐயப்பனை தரிசிக்க 48 நாள் விரதம் மேற்கொண்டு, மாலை அணிந்து இருமுடி கட்டி, ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று வருகின்றனர்.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறி வருகிறது. தினமும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சபரிமலைக்கு வருவதால், காவல்துறையினரும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: “ஊரை விட்டு ஒதுக்கி வச்சுடாங்க.. காலில் விழுந்தால் சேர்த்துப்பாங்களாம்” - கதறும் குடும்பத்தினர்!
இது மட்டுமின்றி ஐயப்பனை தரிசிப்பதற்காக பக்தர்களின் கூட்டம் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. சுமார் 16 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவர், கடந்த 40 ஆண்டுகளாக ஐயப்பனுக்கு மாலை அணிந்து தரிசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்த வருடம் ஐயப்பனுக்கு விரதம் இருந்து, இருமுடி கட்டி சபரிமலைக்குச் சென்ற அவர், பம்பையில் இருந்து 18ஆம் படிக்குச் செல்ல முடியாததால் திரும்பியுள்ளார். வேறு வழியின்றி எருமேலியில் இருமுடியை அவிழ்த்த அவர், சபரிமலை ஐயப்பனை காண முடியாமல் கண்ணீருடன் திரும்பிச் சென்றார்.
மேலும், தனது 40 வருடத்தில் இது போன்ற கஷ்டங்களை அனுபவித்ததில்லை எனக் கூறிய அவர், கேரள அரசாங்கம் பக்தர்களுக்கு பாதுகாப்பு கொடுக்காமல் இருப்பதாக குற்றம் சாட்டினார். இந்நிலையில், இதில் மத்திய அரசாங்கம் தலையிட்டு, முறையாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.
இதையும் படிங்க: "நாளைய மத்திய அமைச்சரே".. சபரிமலையில் வைரலாகும் திருமாவளவன் போஸ்டர்!