தேனி அல்லிநகரம் வெங்கலா கோயில் தெருவில் கணேசன் என்பவரது வீட்டில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) மாவட்ட திட்டமிட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு மற்றும் அல்லிநகரம் காவல்துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். சோதனையில், தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 1700 கிலோ எடையுடைய போதை பாக்குகள், 70 மூடைகள் நிறைந்த புகையிலைப் பொருள்கள் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.
அதன் பின்னர் வீட்டின் உரிமையாளர் கணேசன், ராஜகுரு, மணிகண்டன் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தேனி ஆயுதப்படை மோப்பநாய் பிரிவு காவலர் பிரசன்னா என்பவர் ராஜகுரு, மணிகண்டனிடம் தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு போதை பாக்குகள், புகையிலை பொருள்களை சப்ளை செய்ய சொல்வதும், இதற்காக காய்கறி வண்டிகளில் நடுப்பகுதியில் மறைத்து நூதனமாக கடத்தி அவர் கூறிய கடைகளில் சப்ளை செய்து வந்ததாக தெரியவந்தது.