தேனி மாவட்டம்கம்பம் உழவர் சந்தை அருகே உள்ள பார்க் திடலில் நேற்று (டிசம்பர் 24) திராவிடர் கழகம் சார்பில் தந்தை பெரியார் நினைவு நாள், சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை ஜனநாயக முற்போக்கு கொள்கை விளக்க திறந்த வெளி மாநாடு நடைபெற்றது. அதில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், சி.பி.ஐ சார்பில் முத்தரசன், திமுக சார்பில் கம்பம் செல்வேந்திரன் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இதில் திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி சிறப்புரையாற்றினார். முன்னதாக சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்த 8 பக்தர்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய வீரமணி, ”கடவுள் மறுப்பாளர்களான நாங்கள் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் மரணத்திற்கு ஏன் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும் என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கு நாங்கள் சொல்வது பெரியார் சொன்னது போல கடவுளை மறு! மனிதனை நினை! என்பது தான். என்னை பொறுத்தவரை சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு செல்வது மூட நம்பிக்கை, ஆனால் அவர்களுக்கு அது பக்தி. இது போன்று கோயிலுக்கு சென்று வந்த இடத்தில் விபத்துக்குள்ளாகி யார் உயிரிழந்தாலும் பக்தரோ, ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவினர் என யாராக இருந்தாலும் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்துவோம் மனிதன் என்கிற அடிப்படையில் எனத் தெரிவித்தார்.
நாங்கள் எல்லாம் கடிகாரத்தில் உள்ள நேரத்தை கண்டு அஞ்சி அதற்கு ஏற்றாற் ஓட வேண்டும் என உழைத்துக் கொண்டிருக்கிறோம். சிலரை போல் கட்டிய கடிகாரத்தின் வரலாற்று தாட்பரியத்திற்கு பயப்படுவார்கள் அல்ல . பெரியார் தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டார் என அவரது மறைவுக்கு கலைஞர் கருணாநிதி இரங்கல் கடிதம் எழுதினார். ஆனால் பெரியாரின் உடல் தான் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டது. அவரது தத்துவங்கள் ஏற்படுத்தியிருக்கிற சுற்றுப் பயணம் பெரியார் உலக மயம், உலகம் பெரியார் மயம் ஆனதாக ஈவிகேஎஸ் இளங்கோவன் என்னிடம் தெரிவித்தார்.
இன்றைக்கு இங்கு நடைபெறும் கூட்டத்திற்கு அனுமதி வழங்குவதற்கு காவல்துறையினர் தயங்கினர். ஏனெனில் ஏதாவது விபரீதமாக பேசுவார்கள் எனற அச்சத்தில். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பது இன்னும் ஒரு சில காவல் துறை அதிகாரிகளுக்கு தெரியவில்லை போலும். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து தான் நாங்கள் இங்கு பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.
எங்களிடம் இருக்கின்ற அறிவுக் கடப்பாரை சானாதனத்தை தான் உடைத்து எறியும். இதனால் அரிசனரும் அரசாங்கத்தின் அரசனாக ஆக முடியும். கடவுள் இல்லை என்று சொல்லி வரும் எங்களால் எந்த ஒரு கோயிலோ வழிபாட்டு தலங்களோ உடைக்கப்பட்டது உண்டா. ஆனால், உங்கள் வரலாறு தடை செய்யப்பட்ட வரலாறு. இந்தியாவில் 3 முறை தடை செய்யப்பட்ட இயக்கம் என்ற பெயர் பெற்றது தான் ஆர்.எஸ்.எஸ். வித்தைகளால் மீண்டும் வருகிறது. ஆனால் விரைவில் அது முற்று பெரும்.