தேனி: தமிழ்நாட்டில் சமீபத்தில் தெருநாய்களின் அபாயம் அதிகரித்து வந்த நிலையில், தமிழ்நாடு அரசு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், தேனியில் தெருநாய் ஒன்று வெறி பிடித்த நிலையில் பிரதான சாலையில் நின்று கொண்டிருந்த மக்களைக் கடிக்கத் துவங்கியதில் ஒரு குழந்தை, மூன்று பெண்கள் என மொத்தம் 13 பேர் காயமடைந்த சம்பவம். அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு மலைக் கிராமத்தில் ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், எப்போதுமே மக்கள் நடமாட்டம் நிறைந்திருக்கும் வருசநாடு - வாலிப்பாறை பிரதான சாலையில் திடீரென புகுந்த வெறி நாய் ஒன்று, அங்குக் கூடியிருந்த மக்களை விரட்டி கடிக்கத் துவங்கியது.
தொடர்ந்து, தனியார் மருந்தகத்தில், மருந்துகளை வாங்கிக் கொண்டிருந்த நபர்களை திடீரென வெறிநாய் கடித்தது. அதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சத்தம் போடவே அருகிலிருந்தவர்கள் அந்த நாயைக் கற்களை எறிந்து துரத்தினர். அங்கிருந்து ஓடிச்சென்ற அந்த வெறிநாய் வருசநாடு வாலிப்பாறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த ஒரு குழந்தை, 3 பெண்கள் உள்ளிட்ட 13 பேர்களை விரட்டி கடித்தது.