மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கடந்த 10 நாட்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இதனால் நாடு முழுவதும் இன்று (டிச்.08) ஒரு நாள் பாரத் பந்திற்கு விவசாய சங்கங்கள், எதிர்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்தனர்.
இதனை அடுத்து தமிழ்நாட்டில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் அரசு, தனியார் பேருந்துகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போல இயங்கின. மேலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் எந்தவித பாதிப்பும் இன்றி இருந்தது.
இதனிடையே பாரத் பந்திற்கு ஆதரவு கோரி தேனி நகர திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகளான கம்யூனிஸ்ட், காங்கிரஸார் கடைகளை அடைக்குமாறு வற்புறுத்தினர்.
தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மதுரை சாலையில் ஊர்வலமாக சென்ற எதிர்க்கட்சியினர் பங்களாமேடுவரை உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஜவுளி, ஜூவல்லரி, பேக்கரி கடை உரிமையாளர்களிடம் பேசி விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்று வரும் பாரத் பந்திற்கு ஒத்துழைப்பு தருமாறு கூறினார். இருந்த போதிலும் எப்போதும் போல கடைகள் திறக்கப்பட்டே இருந்தன. இதனால் காவல் துறையினர் அப்பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:வேலை நிறுத்தம் - சென்னையில் வழக்கம்போல் ஓடிய பேருந்துகள்!