தேனி:'விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பின்கீழ் திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று தேனி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். தேனி திமுக தெற்கு மாவட்டம் சார்பில் ஆண்டிபட்டி பேருந்து நிலையத்தில் திறந்த வேனில் நின்று பேசிய அவர், அடுத்ததாக மொட்டனூத்து பகுதிக்கு சென்றார்.
உதயநிதி வாகனத்தை வழிமறித்த தொண்டர்கள் - விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்
வரவேற்க காத்திருந்த தொண்டர்களை சந்திக்காமல் கையசைத்துவிட்டு சென்றதால், உதயநிதியின் வாகனத்தை வழிமறித்து திமுக தொண்டர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை அருகே மறவபட்டியை சேர்ந்த மகாராஜன் என்பவர் உதயநிதி ஸ்டாலினை வரவேற்பதற்காக தனது ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோருடன் காத்திருந்தார். ஆனால் உதயநிதி ஸ்டாலின் வானத்தை விட்டு இறங்காமல் கையசைத்து விட்டு உடனடியாக புறப்பட முயன்றார்.
இதனால் திமுக தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலினின் வாகனத்தை மறித்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உதயநிதி வாகனத்தை அனுப்பி வைத்தனர்.