தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பாக சரவணகுமார், அமமுக சார்பாகத் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் கதிர்காமு உள்பட 13 பேர் போட்டியிடுகின்றனர். வேட்பாளர்கள் பெயர்கள் அறிவித்ததிலிருந்தே திமுக, அமமுக கட்சியினர் அனைத்து பகுதிகளிலும் பரப்புரையைத் தொடங்கினர்.
தேவாலயத்தில் ஒரே நேரத்தில் வாக்கு சேகரித்த திமுக, அமமுக வேட்பாளர்கள்! - தேவாலயத்தில் ஒரே நேரத்தில் வாக்கு சேகரித்த எதிர், எதிர் கட்சி வேட்பாளர்கள்!
தேனி: திமுக, அமமுக கட்சிகளைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் வாக்கு சேகரிக்க தேவாலயத்திற்கு வந்ததால், பிரார்த்தனைக்காக வந்திருந்த மக்கள் குழப்பமடைந்தனர்.
தேர்தல் பரப்புரைக்காக வேட்பாளர்கள் மசூதி, தேவாலயம், கோயில்கள் என அனைவரிடமும் வாக்கு சேகரித்து வருகின்றனர். இதில் தேனி மாவட்டம் பெரியகுளம் ஆடுபாலம் அருகே உள்ள சிஎஸ்ஐ தேவாலயத்திற்கு இன்று அமமுக வேட்பாளர் கதிர்காமு, திமுக வேட்பாளர் சரவணகுமார் ஆகியோர் வாக்கு சேகரிப்பிற்காக வந்தனர். எதிர், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த இரு வேட்பாளர்களும் ஒரே நேரத்தில் தேவாலயத்திற்கு வந்ததால், பிரார்த்தனைக்காக வந்திருந்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
முதல் ஆளாக அமமுக வேட்பாளர் கதிர்காமு தேவாலயத்திலிருந்து வெளியே வந்து மக்களிடம் பரிசுப்பெட்டி சின்னத்தில் வாக்கு சேகரிக்க, அவருக்கு அடுத்து நின்றிருந்த திமுக வேட்பாளர் சரவணகுமார், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.