தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியில் அமைந்துள்ளது ஶ்ரீமுத்துமாரியம்மன் கோயில். குறிப்பிட்ட ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட இத்திருக்கோயிலில் காலப்போக்கில் பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் வழிபடத் தொடங்கினர். இதனிடையே இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோயிலை கொண்டு வர வேண்டும் என்று குறிப்பிட்ட சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோயிலில் திருவிழா உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் நடத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் நவராத்திரி பண்டிகையையொட்டி தற்போது கோயில் நிர்வாகத்தினர் சார்பில் கொழு வைக்கப்பட்டு தினசரி வழிபாடு நடைபெற்று வருகிறது. இதனை நடத்தக் கூடாது என்று குறிப்பிட்ட சிலர் இன்று(அக்.22) கோயிலில் அமர்ந்து தர்ணா செய்தனர்.