தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

"தெந்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்து குடியான் இடுவிச்ச செக்கு" என்ற வரிகள் பொருந்திய கல் செக்கு ஒன்று ஆண்டிபட்டியில் கண்டறியப்பட்டுள்ளது

'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?
'9ஆம் நூற்றாண்டு கல் செக்கு' - ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் என்ன தொடர்பு?

By

Published : Sep 27, 2020, 5:35 PM IST

Updated : Sep 27, 2020, 6:10 PM IST

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே முனைவர். காந்திராஜன் தலைமையிலான தொல்லியல் ஆய்வாளர்கள் குழு பாறை ஒன்றில் கல் செக்கினை கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். சுமார் 15 அடி நீளம், 3அடி உயரம், 7 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செக்கில் அமைந்துள்ள கற்குழி 25 இன்ச் வெளி விட்டமும், 10 இன்ச் உள் விட்டமும் கொண்டுள்ளது.

"தெந்முட்ட நாட்டு கண்ணிமங்கலத்து குடியான் இடுவிச்ச செக்கு" என்ற வரிகளும் செக்குடன் கூடிய கல்வெட்டில் இடம்பெற்றுள்ளன. இக்கல்வெட்டு 9ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டாக இருக்கக்கூடும் என கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் இராசவேலு கூறுவதாக வைகை தொல்லியல் ஆய்வாளர் பாவெல் பாரதி இயம்புகிறார்.

ஆண்டிப்பட்டி டூ கிண்ணிமங்கலம் தொடர்பு? - 9ஆம் நூற்றாண்டு கல் செக்கு சொல்லும் செய்தி

இது குறித்து பேசிய அவர், "அந்த காலங்களில் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ளும் பயணிகள், துறவிகள், வணிகர்கள், நடமாடும் கலைக் கூத்தாடிகள் உள்ளிட்டோர் வழிப் பயணத்திலேயே தங்க நேரிடும்போது அவர்கள் சமைப்பதற்காக நீர்நிலைகளுக்கு அருகேயுள்ள பாறைகளில் உணவுப் பொருட்களை அரைப்பதற்கு ஏதுவாக கற்களில் செக்கு உருவாக்குவது வழக்கம்.

அதன்படி மதுரையிலிருந்து சதுரகிரி மகாலிங்கம் கோயில், மாவூற்று வேலப்பர் கோயில், பெரியகுளம் பாலசுப்ரமணியர் கோவில், சின்னமனூர் சிவகாமியம்மன் கோயில் போன்ற வழிபாட்டுதலங்களுக்கு செல்லும் நபர்களென்று உணவு தயார் செய்து வழங்க இங்கு சேவடி கூட்டம் என்ற குழுவினர் இருந்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய கற்செக்காகத்தான் இது இருக்க வேண்டும். சேவடி என்பது இறை அடியவர்கள் அல்லது இறைத்தொண்டை குறிப்பதாகும்" என்றார்.

பொதுவாக இதுபோன்ற செக்குகள் மன்னர்களாலும், மக்களாலும் வழிபாட்டுத் தலங்களுக்கு கொடையாக வழங்கப்படும். அவ்வாறு தானம் வழங்கும் நபரின் விவரம் கல்வெட்டில் குறிக்கப்படும் என்றும் கூடுதல் தகவல்களையும் இவர் நம்மிடம் பகிர்கிறார்.

கிண்ணிமங்கலம் தமிழிக் கல்வெட்டு கிமு 2 - 1ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது - தமிழக தொல்லியல் துறை

மேலும், "இந்த செக்கை வடிவமைத்தவர்கள் தெந்முட்ட நாட்டைச் சேர்ந்தவர்களாக இருக்கக்கூடும். ஆனால் ஒரு சிலர் ஆண்டிபட்டியில் இக்கல்வெட்டு கிடைத்திருப்பதால் இது தெந்முட்ட நாடு எனக் கூறுகின்றனர். தெந்முட்ட நாடு என்பது ஆண்டிபட்டி கணவாய் பகுதிக்கு கிழக்கே உள்ள மல்லப்புரம், சூலப்புரம், மேலத்திருமாணிக்கம், எழுமலையில் தொடங்கி பெருங்காமநல்லூர் வரையிலான இடங்கள் ஆகும். ஆண்டிபட்டி அளநாட்டுப் பகுதியாக இருந்துள்ளது.

9ஆம் நூற்றாண்டு கல் செக்கு

குறிப்பாக இங்குள்ள கல்வெட்டில் "கண்ணிமங்கலத்து குடியான் சேவடி" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில், கிண்ணிமங்கலத்தில் கண்டெடுக்கப்பட்ட ஏகநாதர் கோட்டம் கல்வெட்டின் படி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியில் செயல்பட்டு வந்த சமய நிறுவனம் பள்ளிப்படையாகவும், மடமாகவும் இருந்துள்ளது. ஒரு வேளை கண்ணிமங்கலம் என்பதற்கு பதிலாக கிண்ணிமங்கலமாக இருந்திருந்தால் அந்த பகுதியினரால் இங்கு வந்து செல்கின்ற பக்தர்கள், துறவிகள், வணிகர்கள் இந்த கல்செக்கை உருவாக்கியிருக்கலாம் என்று எடுத்துக்கொள்ளப்படும்" எனத் தெரிவித்தார்.

'தமிழி' எழுத்து வரலாற்றில் முக்கியத் திருப்புமுனை; 'மா' மதுரையில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொக்கிஷம்!

அண்மைகாலமாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இது போன்ற பழங்கால பொருட்கள், நினைவு சின்னங்கள், கல்வெட்டுகள் உள்ளிட்டவை கிடைத்த வண்ணமாக இருக்கிறது. நம் முன்னோர்களின் வரலாற்று எச்சங்களாய் விஞ்சியிருக்கும் இவை பாதுகாக்கப்பட வேண்டியவை. திறந்தவெளியில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த கல் செக்கை பாதுகாக்க வேண்டும் என்பதே தொல்லியல் ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

Last Updated : Sep 27, 2020, 6:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details