தேனி மாவட்டம் கூடலூர் சுக்காங்கல்பட்டி தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). கூடலூர் பகுதியில் அரிசிக்கடை நடத்தி வந்த இவர் மாயாண்டி குடும்பத்தார் திரைப்பட நடிகரும், திமிரு, காளை உள்ளிட்ட படங்களின் இயக்குநருமான தருண் கோபியின் அண்ணன் ஆவார்.
இவர் நேற்றிரவு கம்பத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் கூடலூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்வபுரம் பிரிவு அருகே கம்பத்தை சார்ந்த நவீன் (22) மற்றும் விக்னேஷ்குமார்(21) ஆகியோர் கம்பம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளனர்.
இந்நிலையில், நவீன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் ராஜேந்திரனின் இருசக்கர வாகனத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ராஜேந்திரன் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.