தேனி:கோயம்புத்தூர் சரக டிஐஜி விஜயகுமார் இன்று (ஜூலை 07) காலை நடைப்பயிற்சி சென்று வந்தபின் தனது முகாம் அலுவலகத்தில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, விஜயகுமாரின் உடல் கோயம்புத்தூரில் இருந்து சாலை மார்க்கமாக தேனி ரத்தினம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.
தேனி மாவட்டம் போடி அணைக்கரைப்பட்டியை பூர்வீகமாகக் கொண்ட விஜயகுமார் ஐபிஎஸ். தேனி ரத்தினம் நகரில் இவரது தந்தை செல்லையா ஓய்வு பெற்ற விஏஓ மற்றும் அவரது தாய் ராசாத்தி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆகியோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிஐஜி விஜயகுமார் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து அவரது உறவினர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் ஆகியோர் அவரது இல்லத்திற்கு வருகை தந்து அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அவரது இல்லத்திற்கு முன்பு வைக்கப்பட்ட விஜயகுமாரின் உடலை பார்த்து அவரது தாய் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுது சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படத்தியுள்ளது.