தேனி மாவட்டம் போடி சட்டப்பேரவை தொகுதிக்குள்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 966 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, திருமண உதவித்தொகை, தாலிக்குத் தங்கம், நாட்டுக்கோழி குஞ்சுகள் உள்ளிட்ட 2 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கலந்துகொண்ட பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் விழா மேடையில் பேசிய ஓ. பன்னீர்செல்வம், "தேனி மாவட்டத்தில் இதுவரை திருமண நிதியுதவி, தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின்கீழ் 34 ஆயிரத்து 230 பயனாளிகளுக்கு 92 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளை ஊக்குவிக்கும்பொருட்டு, வீரபாண்டியில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் புதிதாக தொழிற்பேட்டை (சிட்கோ) அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்" என்றார்.
மேலும் பேசிய அவர், "தேனி எம்பி ரவீந்திரநாத் உதவியுடன் மதுரை – போடிநாயக்கனூர் அகல ரயில் பாதை சேவை விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
நலத்திட்ட உதவிகள் வழங்கிய துணை முதலமைச்சர் மேலும், முதுவார்க்குடி முதல் டாப்ஸ்டேசன் வரை 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சோத்துப்பாறை முதல் அகமலை வரை 36 கோடியே 76 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் சாலை மேம்பாட்டுப் பணிகள் அமைப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: EXCLUSIVE: 'தலைசிறந்த அலுவலர்களை உருவாக்கும் தமிழ்நாடு போலீஸ் அகாடமி'