புரெவி புயல் தமிழ்நாட்டில் நாளை கரையைக் கடக்க உள்ள நிலையில், தென் மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தேனி மாவட்டத்தில் புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் இன்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார்.
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் முதன்மை செயலாளரும், மாவட்ட கண்காணிப்பாளருமான கார்த்திக், மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ், கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையன், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், வெள்ள அபாயம் நிறைந்த பகுதிகளாக தேனி மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ள 43 இடங்கள் மற்றும் பாதிப்படையும் மக்களை தங்க வைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 66 தங்கும் விடுதிகளை தயார் நிலையில் வைத்திருக்கமாறு அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும் பாதிப்புகள் ஏற்படக்கூடிய முல்லைப் பெரியாற்றங் கரையோரப் பகுதிகள், நீர்நிலைகளில் வசிக்கின்ற மக்கள் கவனமுடன் இருக்க எச்சரிக்கை விடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக கம்பம் மெட்டு, போடி மெட்டு உள்ளிட்ட மலைச்சாலைகளில் பயணிப்பவர்கள் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செல்லவும், எதிர்பாராத விதமாக மலைச்சாலைகளில் ஏற்படும் மண்சரிவுகளை சரி செய்வதற்கு தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
செய்தியாளர்களைச் சந்தித்து பேசும் ஓ.பி.எஸ் இதையடுத்து ஓ.பி.எஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அதிமுக தொண்டர்களுக்கான இயக்கம். ஆலமரம் போல் வளர்ந்திருக்கும் அதிமுக தொண்டர்கள் மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். யார் அரசியலுக்கு வந்தாலும் இந்த ஆலமரத்தை அசைக்க முடியாது.
ரஜினியுடனான கூட்டணி தொடர்பான கேள்விக்கு பதிலளித்தவர், முதலில் அரசியல் இயக்கத்தை ரஜினி தொடங்கட்டும் தேர்தல் நேரத்தில் அது குறித்து கூறப்படும். மேலும் ஆணா? பெண்ணா? என குழந்தை பிறந்த பிறகுதான் பெயர் வைக்க முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:வலுவிழந்தது புரெவி புயல்