தேனி:துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு அரசுத் துறை நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதலாவதாக வருசநாடு அருகேயுள்ள வாலிப்பாறை, முறுக்கோடை, நரியூத்து, முத்தலாம்பாறை ஆகிய பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகளைத் திறந்துவைத்து கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மயிலாடும்பாறையில் நடைபெற்ற விழாவில், வேளாண்மை, கால்நடை பராமரிப்பு, வருவாய்-பேரிடர் மற்றும் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் கடமலை - மயிலை ஒன்றியத்திற்குள்பட்ட கரட்டுப்பட்டி, தாழையூத்து, உப்புத்துறை, நொச்சிஓடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 93 மலைவாழ் பழங்குடியின மக்களுக்கு ரூ.1.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இதையடுத்து ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பாலூத்து, முத்தலாம்பாறை, டி.ராஜகோபாலன்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.26.88 கோடி மதிப்பிலான அங்கன்வாடி மையம், ரூ.34.50 லட்சம் மதிப்பில் குமணன் தொழு கிராமத்தில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனை கட்டடங்களைத் திறந்துவைத்தார்.