தேனி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 43 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களில் போடியைச் சேர்ந்த பெண் ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில், மீதமிருந்த 42 நபர்கள் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பினர். இதனால் சிவப்பு மண்டலத்தில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு தேனி மாவட்டம் மாறியது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு மற்றும் வெளி மாநிலம் சென்று திரும்பியவர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் என தற்போது வரை புதிதாக 35 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.