தமிழ்நாட்டில் சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளைத் தொடர்ந்து தேனியிலும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். இதற்காக தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.265 கோடி மதிப்பீட்டில், புதிய கட்டடம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2020-21ஆம் கல்வி ஆண்டில் முதற்கட்டமாக 40 மாணவர்களுடன் வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்காலிகமாக அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி வகுப்புகள் தொடங்குவதற்கு, பெரியகுளம் அருகே உள்ள தனியார் கல்வி நிறுவன வளாக இடம் தேர்வு செய்யப்பட்டது.
பெரியகுளம் - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்வி நிறுவன வளாகத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (04.08.20) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் மருத்துவமனை வளாகம் முழுவதும் புதர் மண்டி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். பின்னர் சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அலுவலர்களைக் கண்டித்து, இருப்பிடத்தை சுத்தமாக வைப்பதற்கு உத்தரவிட்டார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பாலச்சந்தர், பதிவாளர் ஞானராஜ் மற்றும் தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:பாஜக பக்கம் சாயும் திமுக வி.ஐ.பி தொகுதி எம்எல்ஏ!