தெருவில் சீர் கொண்டு செல்ல பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுப்பு தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள குள்ளப்புரத்தைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் கடந்த செப்டம்பர் 17-ஆம் தேதி தனது குழந்தைகளுக்கு காதணி விழா வைத்த நேரத்தில், ஜெயமங்களம் பகுதியைச் சேர்ந்த அவருடைய உறவினரான சக்தி மற்றும் உறவினர்கள் ஒன்றிணைந்து வெடி வெடித்து, தாரை தப்பட்டை உடன் சீர் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது குள்ளப்புரம் பகுதியில் மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த சிலர், தங்கள் தெருக்களில் வெடி வெடித்து சீர் கொண்டு செல்லக்கூடாது என்று வழிமறித்து அவர்களை திருப்பி அனுப்பியதாகவும், அதனைத் தொடர்ந்து அவர்கள் மாற்றுப் பாதையில் சென்று சீர் செய்ததாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க:திருமணமான இரண்டே ஆண்டில் இளம் பெண் உயிரிழப்பு; சந்தேக மரணமாக வழக்கு பதிவு!
இந்த நிலையில், தெருவில் செல்ல அனுமதிக்காத நபர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜெயமங்கலத்தைச் சேர்ந்த சக்தி என்பவர், ஜெயமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, புகாரின் அடிப்படையில் ஜெயமங்கலம் காவல் துறையினர் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்காததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று (செப்.24) குள்ளபுரம் மற்றும் ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், ஜெயமங்கலம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:கோத்தகிரியில் கூலி தொழிலாளி கொலையில் திடுக் திருப்பம்..! மனைவியிடம் மதுபோதையில் உளறியதால் வெளி வந்த ரகசியம்!