தேனி: கேரளா மாநிலம் மூணாறு அருகே உள்ள சின்ன கானல் பகுதியில் 10 பேருக்கும் மேற்பட்டோரை கொன்று அட்டகாசம் செய்து வந்த அரிசிகொம்பன் ஒற்றைக் காட்டு யானையை பல முயற்சிகளுக்குப் பின்பு கேரளா வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.
பிடிக்கப்பட்ட யானை, தமிழ்நாடு-கேரள எல்லையான பெரியாறு புலிகள் வனக்காப்பக பகுதியில் விடப்பட்டது. மேலும் யானை நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்கும் விதமாக யானையின் கழுத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னர், பெரியார் புலிகள் வனகாப்பகப் பகுதியிலிருந்து யானை தினமும் பல கிலோ மீட்டர் கடந்து இடம்பெயர்ந்து கொண்டே இருந்தது. தேனி மாவட்டம் மேகமலை பகுதியில் உள்ள இரவங்கலாறு, மணலாறு போன்ற பகுதிகளில் உலா வந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்து அப்பகுதியில் உள்ள கடைகளில் சென்று அரிசிகளை உண்பதும் மலைப்பாதை சாலைகளில் செல்லும் அரசு பேருந்து வழிமறித்து அச்சுறுத்தும் நிகழ்வும் நடைபெற்றது.
இதனால் மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடைவிதித்து, யானையை வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். இந்த நிலையில் நேற்று (மே 26) இரவு, ரோஜா பூ கண்டம் வழியாக லோயர் கேம்ப் பகுதிக்கு இடம்பெயர்ந்த அரிசிகொம்பன் யானை, கூடலூர் அருகே கழுதை மேட்டுப்பட்டி பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்திய நிலையில், தமிழ்நாடு மற்றும் கேரளா வனத்துறையினர், அந்தப் பகுதியில் முகாமிட்டு அரிசிகொம்பனை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்