தேனி நகரின் மையப்பகுதியில் கொட்டக்குடி ஆறு ஓடுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள கொட்டக்குடி எனும் இடத்தில் உற்பத்தியாகி போடி, முந்தல், அணைக்கரைப்பட்டி, கோடாங்கிபட்டி வழியாக வந்து தேனி அரண்மனைப்புதூரில் முல்லை பெரிய ஆறு வழியாக வைகை அணையில் கலக்கிறது.
இந்நிலையில் தேனி நகரின் மையப்பகுதியில் உள்ள சடையால் முனீஸ்வரர் கோயில் பகுதிக்கு அருகாமையில் ஓடுகின்ற கொட்டக்குடி ஆற்றில் மீன்கள் செத்து மிதக்கின்றன.
தற்போது நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், கொட்டக்குடி ஆற்றில் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது.
கோயில் அருகே ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்! இதனால் ஆற்றின் பள்ளங்களில் தேங்கியுள்ள குறைந்த அளவு தண்ணீரில் வளர்ந்துள்ள மீன்களை அப்பகுதியினர் சிலர் பிடித்து வருகின்றனர்.
இதனிடையே மீன்களை பிடிப்பதில் அவர்களுக்குள் ஏற்பட்ட போட்டியினால் சிலர் தண்ணீரில் விஷம் கலந்திருக்கலாம் என அப்பகுதி பொதுமக்கள் கருதுகின்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.