தேனி:பழனிசெட்டிபட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருபவர் வேணுகோபால் பாண்டியன் (வயது 55). இவருக்கு 16 வயதில் ஒரு மகளும், 8 வயதில் மகனும் உள்ளனர். வேணுகோபால் பழனிசெட்டிபட்டியில் பழைய இரும்பு மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி இரவு சுமார் 8 மணி அளவில் வேணுகோபால் தலையில் பலத்த காயங்களுடன் நடுரோட்டில் விழுந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
அவர் அருகிலே அவரது இருசக்கர வாகனமும் விழுந்து கிடந்ததால், ஸ்கூட்டரில் செல்லும்போது தவறி விழுந்து தலையில் அடிபட்டதாக கருதி அப்பகுதியில் உள்ளோர் 108 ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அப்போது, அவரது தலையில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அரிவாளால் வெட்டப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் உடனடியாக அவரை மதுரையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் விசாரிணையை தொடங்கினர். அப்போது அப்பகுதியில் இருந்த வணிக நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், வேணுகோபால் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது மற்றொரு இரு சக்கர வாகனத்தில் ஒரு சிலர் அவரை பின்தொடர்வது தெரிய வந்தது.
மேலும் இச்சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே கேட்பாரற்று ஒரு இருசக்கர வாகனமும் கிடந்துள்ளது. அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அந்த விசாரணையில், வேணுகோபாலின் மகள் பெரியகுளத்தைச் சேர்ந்த இளைஞரை காதலிக்கும் விவகாரம் தெரிய வந்தது.
இது தொடர்பாக அந்த இளைஞரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவரும் அவரது நண்பர்களான பெரியகுளத்தைச் சேர்ந்த இருவருடன் திட்டமிட்டு வேணுகோபால் பாண்டியனை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டியதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது வேணுகோபால் மகள் கடந்த ஆண்டு தேனியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், காதல் விவகாரம் காரணமாக அவரை வேணுகோபால் பாண்டியன் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து வேணுகோபால் தாயார், தனது மகனை கண்டித்ததுடன் பேத்தியை அழைத்துக் கொண்டு வைகை அணை அருகே உள்ள சிறுமியின் தாய்வழி பாட்டி வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு சிறிது காலம் இருந்த பின்னர் மற்றொரு உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று ஒரு மாத காலம் தங்க வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனது பேத்தியை அழைத்துக்கொண்டு பெரியகுளத்தில் உள்ள தனது இளைய மகன் வீட்டிற்குச் சென்ற வேணுகோபாலின் தாயார் அங்கு தங்க வைத்துள்ளார்.
பின்னர் வேணுகோபாலும் அவரது மனைவியும் பெரியகுளம் சென்று, படிப்பு பாழாகிறது என்று கூறி தங்களுடன் வருமாறு மகளை அழைத்தபோது மகள் வர மறுத்து உள்ளார். இந்த நிலையில் சிறுமிக்கும் அந்த இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தெரிந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து இளைஞரை அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளனர்.