வடகிழக்குப் பருவமழை தொடங்கியதையடுத்து தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்தது. இதில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் முக்கிய நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக நீண்ட நாள்களாக தண்ணீரின்றி வறண்டிருந்த கண்மாய்களுக்கு நீர்வரத்து ஏற்பட்டு தற்போது 11கண்மாய்கள் முழுமையாக நிரம்பி வழிகின்றது.
இதில் பொதுப் பணித் துறையினர் கட்டுப்பாட்டில் உள் மஞ்சளாறு வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட 99 கண்மாய்களில், பெரியகுளம் பகுதியில் உருட்டிக்குளம், சின்னபூலான்குளம், மனக்காட்டுக்குளம், நந்தியாபுரம் குளம், ஆண்டிக்குளம், இ.புதுக்குளம், கைக்கிளான்குளம், செட்டிகுளம் ஆகிய 8 கண்மாய்களும் பெரியாறு வைகை வடிநிலக் கோட்டத்திற்குள்பட்ட 36 கண்மாய்களில் சீப்பாலக்கோட்டை ஸ்ரீரெங்கம் கவுண்டன்குளம், காமாட்சிபுரம் கண்மாய், பூமலைக்குண்டு நந்தவனம் கண்மாய் ஆகிய 3 கண்மாய்கள் என மொத்தம் 11 கண்மாய்கள் நூறு சதவீதம் நீர் நிரம்பியுள்ளன.