தமிழ்நாட்டில் பட்டியலினத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் தொடர்ந்து அவமதிக்கப்படும் செயல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது தேனி மாவட்டத்தில் மீண்டும் ஒரு தலித் சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் தன் மீது சாதி ரீதியாக பாகுபாடு காட்டப்படுவதாக புகார் தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலை - மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்டது ஆத்தங்கரைப்பட்டி கிராம ஊராட்சி. இந்த ஊராட்சி மன்றத்தின் தலைவராக பதவி வகிப்பவர் பழனிச்சாமி. உபதலைவராக சேகர் என்பவர் உள்ளார்.
இந்த நிலையில் தன்னை தரையில் அமரும் படி வற்புறுத்துவதாக ஊராட்சி மன்ற உப தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஊராட்சி மன்றத் தலைவர் இன்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் அதிமுக ஒன்றியத் தலைவரான கொத்தாளமுத்து என்பவர் பணி செய்ய விடாமல் தடுத்து வருகிறார். மேலும் உபதலைவரான சேகர் என்பவரும் தன்னை தரையில் அமரும்படி வற்புறுத்துவதோடு, ஊராட்சிப் பணிகளை செய்ய விடாமல் தடுத்தும் வருகிறார்.
ஊராட்சி மன்றத் தலைவர் பழனிச்சாமி கடந்த இரண்டு மாதங்களாக PFMS மற்றும் இதர ஊராட்சி பணிகளுக்குத் தேவையான நிதியை பெறுவதற்கு கையொப்பம் இட மறுத்து வருகிறார். மீறி கையொப்பம் இட வேண்டும் என்றால் 10% கமிஷன் தர வேண்டும் என்றும் கேட்கிறார். இதனால் மக்களுக்கு சேர வேண்டிய எந்த பணியையும் தன்னால் செய்ய முடியவில்லை. எனவே ஊராட்சிப் பணிகளை மேற்கொள்ளவிடாமல் தடுத்து வருபவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆட்சியரிடம் புகார் மனு அளிக்க வந்துள்ளேன்'' என்றார்.
இதையும் படிங்க:ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டத்தில் வாக்குவாதம்: திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு