தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன. இவற்றில் 22ஆவது வார்டில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால் அந்தப் பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு மூடப்பட்டன.
இதைத்தொடர்ந்து பிற வார்டுகளிலும் பெரியகுளம் சுற்று வட்டாரப் பகுதி மக்களுக்கும் நோய்த் தொற்று அதிகரிக்கத் தொடங்கியதால் கடந்த ஜூன் மாதம் 21ஆம் தேதி முதல் நகராட்சி நிர்வாகத்தால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக மருத்துவமனைகள், மருந்தகங்கள் தவிர்த்து மற்ற அனைத்து வணிக நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் பெரியகுளம் பகுதி வணிகர்கள் நேரக்கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தி கடைகள் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அதனடிப்படையில் நாளை முதல் பெரியகுளம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நிபந்தனைகளுடன் கடைகள் திறப்பதற்கு நகராட்சி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளைத் தவிர்த்து மற்ற இடங்களில் காலை 6மணி முதல் மதியம் 2மணி வரையில் காய்கறி, பழம், மளிகை, இறைச்சி, உணவகங்கள்(பார்சல் மட்டும்), கட்டுமானப் பொருள்கள் விற்பனையகம் மற்றும் உரக்கடைகள் உள்ளிட்ட கடைகள் நேரக்கட்டுப்பாடுகளுடன் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேக்கரி, தேநீர், நகை, ஜவுளி, வீட்டு உபயோக பொருள்கள் விற்பனையகம், செல்போன், டி.வி பழுது நீக்கும் கடைகள் உள்ளிட்டவைகள் திறப்பதற்கான தடை நீடிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீரசோழன் ஆற்றில் தரமற்ற முறையில் தடுப்புச்சுவர் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!