தேனி மாவட்டம், கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.இந்தப் பகுதியில் சேரும் குப்பைகளை அகற்ற 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் 66 பேர் நிரந்தரமாகவும், 96 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றுகிறார்கள். இந்நிலையில் அவர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம் - municipal sweapers
தேனி: உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முறையாக சம்பளம் வழங்காததை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லாமல்,நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-3559005-thumbnail-3x2-cats.jpg)
இதுகுறித்து துப்புரவு பணியாளர்கள் சார்பில் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை வைத்தும், அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் விரக்தியடைந்த 100க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது, பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் இன்றுவரை எங்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.18ஆயிரத்து 884 வீதம் சம்பளம் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதையும் இதுவரை நகராட்சி நிர்வாகம் வழங்கவில்லை எனக் குற்றம்சாட்டினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி அலுவலர்கள் துப்புரவு தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அவர்கள் கலைந்துசென்றனர்.