தேனி:தமிழ்நாடு - கேரள எல்லையை இணைக்கும் முக்கிய மாவட்டமாக தேனி அமைந்துள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ரூ.333.18 கோடி மதிப்பீட்டில் திண்டுக்கல்லில் இருந்து குமுளி வரை இருவழிச்சாலை அமைக்கும் பணி புறநகர் பகுதியில் தொடங்கியது. இந்நிலையில், சபரிமலையில் மண்டல பூஜை விழா தொடங்கியுள்ளது.
இதற்காக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களின் வாகனங்கள் தேனி வழியே அதிகளவில் கடந்து சென்று வருகின்றன. இதனைத் தொடர்ந்து நகர நெரிசலை குறைப்பதற்காக தேனி புறவழிச்சாலை கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேனி அருகே அன்னஞ்சி விளக்கு பகுதியில் உள்ள கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதால் கண்மாய் தண்ணீர் செல்ல வழி இல்லாமல் புறவழிச் சாலை மேம்பாலத்தின் அடியில் தேங்கி நின்றது. இதனால், மேம்பாலத்தில் விரிசல் ஏற்பட்டு பாலம் ஒரு பகுதியாக கீழே இறங்கியதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தரமற்ற முறையில் கட்டப்பட்டதே புறவழிச் சாலை பாலத்தில் ஏற்பட்ட விரிசலுக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
தற்காலிகமாக சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்காக புறவழிச் சாலை பகுதியில் போக்குவரத்தை திறந்து விட்ட நிலையில் பாலத்தின் ஒரு பகுதி கீழே இறங்கியது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:வத்தலக்குண்டில் ஓட்டுநர் இல்லாமல் ஓடிய பஸ்: சிசிடிவி வைரல்!