தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
‘சுற்றுலா பயணமாகவே முதலமைச்சர் வெளிநாடு சென்றார்’ - பாலகிருஷ்ணன் தாக்கு - சிபிஐ
தேனி: முதலமைச்சரின் வெளிநாட்டு சுற்றுப் பயணம் அவரின் ஓய்வுக்கும், சுற்றுலாவிற்கும் மட்டுமே பயன்பட்டிருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், ‘பாஜகவினர் நரேந்திர மோடியின் 100 நாள் ஆட்சியை கொண்டாடி வருகின்றனர். ஆனால் இந்திய வரலாற்றில் இந்த 100 நாட்கள் துயரம் மிகுந்த நாட்களாக இருக்கிறது. ஏனென்றால் இந்த நாட்களில் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எந்த ஒரு திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை. நாட்டில் இதுவரை எந்த ஒரு பொருளாதார நெருக்கடியும் இல்லை என்று கூறி வந்த மத்திய அரசு, தற்போது அதனை ஒத்துக்கொள்வதாகத் தெரிகிறது. அதன் வெளிப்பாடுதான் ரிசர்வ் வங்கியின் உபரி நிதி ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடியை கைப்பற்றி பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக அறிவித்துள்ளது.
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் அவரின் ஓய்வுக்கும் சுற்றுலாவிற்கும் மட்டுமே பயன்படும். இதனால் எந்த ஒரு முதலீடுகளையும் பெற முடியாது. உலகப் பொருளாதாரப் போர் நடைபெற்று வரும் சூழலில், எந்த ஒரு நாட்டிலிருந்தும் முதலீடுகளைப் பெற இயலாது. இதற்கு மாற்றாக உள்நாட்டில் மூடப்பட்டுள்ள சர்க்கரை ஆலைகள், நூற்பாலைகள், சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.