"வண்டி வந்துருச்சு... வேகமா கிளம்புங்க.. இந்த ஒத்த வண்டிதான்.. போறதுக்கு வேற வண்டி இல்ல... விடிய கிளம்பி போனாதான் சாயந்திரம் நேரத்துக்கு வர முடியும்" - அதிகாலை 5 மணிக்கெல்லாம் பரபரப்போடு வேலைக்கு புறப்படும் ஏலத்தோட்டத் தொழிலாளர்களில் குரல்கள் தான் இவை. ஏலத் தோட்டங்களின் பராமரிப்புப் பணிகளுக்காக நாள்தோறும் தேனி மாவட்டத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் கேரளாவிற்குச் சென்று வந்தனர். இதற்காக குமுளி, கம்பம் மெட்டு, போடிமெட்டு உள்ளிட்ட மலைச்சாலைகளில் காலை, மாலை என இருவேளைகளிலும் வாகனங்கள் அணிவகுத்துச் செல்லும்.
தேனி மாவட்டம் போடி, சிலமலை, ராசிங்காபுரம், தேவாரம், கோம்பை, உத்தமபாளைம், கம்பம், கூடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் நேரடியாகவும், அவர்களை அழைத்துச் செல்லும் சுமார் 1000க்கும் மேற்பட்ட வாடகை வாகன ஓட்டுநர்கள் மறைமுகமாகவும் இந்த ஏலத் தோட்ட வேலையைத் தான் முழுக்க முழுக்க நம்பி, வாழ்வாதாரத்தை நடத்தி வந்தனர். ஆனால், இந்த கரோனா ஊரடங்கு அவர்களின் வாழ்வாதாரத்தையும் விட்டு வைக்கவில்லை.
நறுமணப் பொருட்களின் ராணி என்று அழைக்கப்படும் 'ஏலக்காய்' சாகுபடி, இந்தியாவில் அதிகம் நடைபெறுவது கடவுளின் தேசமான கேரளாவில் தான். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் வண்டிப்பெரியாறு, உடும்பஞ்சோலை, பீர்மேடு, தேவிகுளம், ராஜாக்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1.25 லட்சம் ஏக்கர் நிலத்தில் ஏலக்காய் சாகுபடி நடைபெறுகிறது. இதில் 40 முதல் 50 விழுக்காடு ஏலத்தோட்டங்கள் தமிழர்களுக்குச் சொந்தமானது. இதுதவிர, கேரள விவசாயிகளின் தோட்டங்களுக்குமாக ஒட்டு மொத்த சாகுபடியின் பராமரிப்புப் பணிகளை தமிழர்களே மேற்கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, தேனி மாவட்டத் தொழிலாளர்களின் அளப்பரிய பங்களிப்பால் கேரளா, ஏலக்காய் சாகுபடியில் வளம் கொழிக்கிறது .
இது குறித்து ஏலத் தோட்டத் தொழிலாளர்கள் கூறுகையில், "விதைப்பு, நடவு, தலை உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல், பந்தல் நடுதல், பயிர் ஊக்கி மருந்துகள் தெளித்தல் எனப் பராமரிப்புப் பணிகளும்; பருவத்திற்கு வந்த பிறகு பழம் பறித்து அதனை உலர்த்தி காய்களை தரம் பிரித்து சந்தைக்கு அனுப்புதல் என ஆண்டு முழுவதும் வேலை இருந்து கொண்டே இருக்கும். நாள் ஒன்றுக்கு ரூபாய் 400 முதல் 500 வரை வருமானம் கிடைக்கும்.
ஆனால், கண்ணுக்குத் தெரியாத சின்னஞ்சிறு நோய்க் கிருமியால் கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக வருமானம் ஏதும் இல்லாமல் தவித்து வருகிறோம். மாற்று வேலைக்கும் வழியில்லாமல் அன்றாட செலவுகளுக்கே திண்டாடி வருகிறோம். தொடர்ந்து இதே நிலை நீடித்தால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுவோம். அரசு ஏதாவது வழி செய்யும் என்ற நம்பிக்கையில் மட்டுமே வைராக்கியத்தோடு வாழ்ந்து வருகிறோம்" என்கின்றனர்.