தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஓபிஎஸ் தம்பி மீது வழக்குப்பதிவு செய்க! நீதிமன்றம் அதிரடி உத்தரவு - பார்வட் பிளாக்

தேனி: தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பி ஓ. ராஜா மீது வழக்குப்பதிவு செய்ய பெரியகுளம் நடுவர் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

File pic

By

Published : Jun 16, 2019, 9:34 AM IST

தேனி மாவட்ட தென்னிந்திய பார்வார்ட் பிளாக் கட்சியின் பெரியகுளம் நகர பொதுச்செயலாளராக இருப்பவர் துரை. இவர் நுகர்வோர் அமைப்பின் தேனி மாவட்ட நிர்வாகியாகவும் உள்ளார்.

இவர், பெரியகுளம் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மணல் கொள்ளையடிக்கப்படுவதை எதிர்த்து மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ச்சியாக புகார் தெரிவித்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து, 2018 அக்டோபர் 21ஆம் தேதி அடையாளம் தெரியாத சில நபர்கள் கடுமையாக தாக்கப்பட்டார். அவரை தாக்கியது துணை முதலமைச்சர் ஓபிஎஸ் தம்பியான ஓ. ராஜாவின் ஆட்கள் என தெரியவந்தது.

இதனையடுத்து, ஓ. ராஜா, அவரது கூட்டாளிகளான நாய் சேகர், குண்டாஸ் ரவி, கல்லுப்பட்டி சசி உள்ளிட்டோர் மீது பெரியகுளம் காவல்நிலையத்தில் துரையின் தம்பி புகார் அளித்திருந்தார்.

ஆனால் காவல் துறையினர் புகாரை பதிவு செய்யாமல் புகார் மனுவிற்கான ரசீதை மட்டும் கொடுத்தனர். அதிலும் ஓ. ராஜாவின் பெயரை குறிப்பிடவில்லை.

இதனிடையே, பெரியகுளம் பகுதியில் ஓ. ராஜாவின் ஆதரவாளர்கள் நியாய விலைக்கடைகளின் பொருள்களை கொள்ளையடிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் துரை புகார் அளித்துள்ளார். இதனால் கோபமடைந்த ஓ. ராஜா, துரைக்கு தொலைபேசி வயிலாக கொலை மிரட்டல் விடுத்துள்ளார். அந்த ஆடியோ வெளியாகி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து துரை தன்னை தாக்கியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய காவல் துறையினரை அறிவுறுத்த வேண்டுமென பெரியகுளம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் புகார் அளித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு மாதத்திற்குள் பெரியகுளம் காவல்நிலைய ஆய்வாளர் இது தொடர்பான வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தேனி பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details