தேனி:நடந்து முடிந்த நகர்ப்புற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியின் 26ஆவது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர், ராஜா முகமது. இந்நிலையில் நகர் மன்றத் தலைவர் பதவியை திமுக உறுப்பினருக்கும் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி உறுப்பினருக்கும் என திமுக தலைமை அறிவித்தது.
இந்நிலையில் பெரியகுளம் நகர்மன்ற துணைத்தலைவர் பதவியை திமுக சார்பில் 26ஆவது வார்டில் வெற்றி பெற்ற ராஜா முகமதுவுக்கு கொடுக்க தேர்வு செய்யப்பட்டார். இவர் நகர் மன்ற துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டதை அடுத்து கூட்டணிக்கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக உறுப்பினர் தேர்வு செய்யப்பட்டதால், அவரை திமுக தலைமை ராஜினாமா செய்து கூட்டணி கட்சிக்கு துணைத் தலைவர் பதவியை கொடுக்க உத்தரவிட்டது.
ஆனால், ராஜா முகமது ராஜினாமா செய்யாத நிலையில் இருந்து வந்தார். இந்நிலையில் பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் புனிதன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக 26ஆவது வார்டில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் ராஜா முகமது தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் நகராட்சிக்கு சொந்தமான மீன் கடையை அவர் பெயரில் ஏலம் எடுத்து நடத்தி வந்ததை காண்பிக்காததால் ஒழுங்கு நடவடிக்கையாக அவரை நகர்மன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.