கடந்த ஒரு மாதமாக சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் பகுதியிலிருந்து பரவிவரும் கரோனா வைரஸ் தாக்கி 213 பேர் உயிரிழந்துள்ளனர் . இந்த வைரஸால் 8,100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தாய்லாந்து, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா என இதுவரை 21 நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. சீனாவின் வூஹானிலிருந்து கேரளா திரும்பிய மருத்துவ மாணவி ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டிருப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் மருத்துவக்குழுக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் எல்லைப்பகுதிகளில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு மருத்துவக் குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், “தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தேனி மாவட்டமின்றி கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்திலிருந்து தினசரி நூற்றுக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போது கேரளாவில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், இங்கு வரும் கேரள நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் சிறப்பு சிகிச்சைகளுக்கு ஏற்பாடு நோய் பாதிப்புடன் வரும் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக எட்டு படுக்கைகள் கொண்ட தனி வார்டு, மூன்று படுக்கைகள் கொண்ட (ICU) சிறப்புச் சிகிச்சை வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மக்கள் பீதியோ அச்சம் அடையவோ தேவையில்லை, அதே வேளையில் எச்சரிக்கயுடன் இருக்க வேண்டும்.
காய்ச்சல், சளி, இருமல், தும்மல், மூச்சு விடுதலில் சிரமம் போன்ற தொற்று ஏற்படுபவர்கள் உடனே அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறலாம். அவர்களுக்கு எந்த நோய்த்தொற்று உருவாக்கியுள்ளது என்பதை உறுதிசெய்த பின்னர் அதற்கேற்ப சிகிச்சை வழங்கப்படும். இங்கு 24 மணி நேரம் சிகிச்சை வழங்கப்படும். சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து முறையான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் கரோனா இல்லை - ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் தகவல்!