தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் 31ஆம் தேதி கம்பம், சின்னமனூர், போடி, உத்தமபாளையம், பெரியகுளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 20 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
கரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் தங்க வைத்து அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சையளித்து வந்தனர். உரிய சிகிச்சைக்கு பின்னர் 20 பேருக்கும் 2 முறை கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அதில் முதல்கட்டமாக 18 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது உறுதியானது.
இதனையடுத்து அவர்கள் கடந்த 5 நாள்களுக்கு முன்பு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அனுமதிக்கபட்டவர்களில் மீதமிருந்த 2 நபர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதியானதால் இருவரும் அவர்களின் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அனைவரும் 2 வாரங்களுக்கு வீட்டில் தனியாக இருக்கும்படி மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர். கரோனாவால் தேனியில் பாதிப்படைந்த 43 நபர்களில் 34 பேர் குணமடைந்துள்ளனர். மீதம் 9 பேர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிங்க:நடமாடும் கரோனா தொற்று சோதனை - வாகன சேவை தொடக்கம்