கரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த, நாடு முழுவதும் மூன்றாவது முறையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவற்றில் திருமணம், மருத்துவம், இறப்பு உள்ளிட்ட தவிர்க்க முடியாத நிகழ்வுகளுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியோடு பொதுமக்கள் சென்று வருவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரோனா பெருந்தொற்று அதிகம் கண்டறியப்பட்ட சென்னை, கோவை உள்ளிட்ட சிவப்பு மண்டலங்களில் இருந்து, தேனி மாவட்டத்திற்கு வருபவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட எல்லையான காட்ரோடு பகுதியில் சுகாதாரம் மற்றும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர். சிவப்பு மண்டல பகுதிகளில் இருந்து வருபவர்களுக்கு, தேவதானப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று, கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.