தேனி மாவட்டத்தில் கரோனா தொற்று காரணமாகப் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் பாதிப்பு அதிகரித்துக் காணப்படுகிறது. இந்நிலையில், பெரியகுளம் அருகே உள்ள மேல்மங்கலம் கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து பரிசோதனை நடைபெறுகிறது.
கரோனா தடுப்பு நடவடிக்கை: கிராமப்புறங்களில் சிறப்பு மருத்துவ முகாம்!
தேனி: பெரியகுளம் பகுதியில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பாதிப்பால், கிராமப் பகுதியில் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, சுகாதாரத் துறையினர் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேல்மங்கலம் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு முகாமில் இரு மருத்துவர்கள், செவிலியர் உள்பட 15க்கும் மேற்பட்டோர் கொண்ட மருத்துவக் குழு பொதுமக்களைப் பரிசோதித்துவருகின்றனர். இன்று முதல் மூன்று நாள்கள் நடைபெறும் இந்தச் சிறப்பு முகாமில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதியில் இருப்பவர்கள், காய்ச்சல், சளி உள்ளிட்ட அறிகுறிகள் இருப்பவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களிடம் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன.