தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள இராஜதானி கிராமத்தில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது.
இந்த வங்கியில் மேலாளர் உள்பட சுமார் 10 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாள்களாக காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்த வங்கி மேலாளர், மருத்துவமனையில் கரோனா கண்டறிதல் பரிசோதனை செய்துள்ளார்.
இந்தப் பரிசோதனை முடிவில் மேலாளருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின் அவர் பணியாற்றிய கிளை அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும் அவருடன் வங்கிக் கிளை அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த வங்கி ஊழியர்களுக்கும் ரத்தமாதிரிகள் சேகரிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இது தவிர சம்பந்தப்பட்ட வங்கியில் அடிக்கடி சென்று வந்த வாடிக்கையாளர்கள் விபரங்களும் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர். மேலும் வங்கிக்கு எதிரில் இராஜதானி காவல்நிலையம் செயல்பட்டு வருவதால் அங்கு பணியாற்றி வரும் காவல்துறையினர் மத்தியிலும் கரோனா பீதி அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: கரோனாவை எதிர்கொள்ள நம்ம ஊரு பாட்டிவைத்தியம் இதோ...!