தேனி, அல்லிநகரம் நகராட்சிக்கு உட்பட்ட 12ஆவது வார்டில் இருக்கும் பெரியார் நகரில் 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கழிவுநீர் வடிகால், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று பொதுமக்கள் தங்களது வீடுகளில் கருப்புக் கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், நகராட்சிக்கு கடந்த 20 வருடங்களாக முறையாக வரி செலுத்தி வருகின்றோம். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடைக்கான வைப்பு நிதியும் செலுத்திவிட்டோம்.
கருப்புக் கொடி கட்டி நகாரட்சி நிர்வாகத்திற்கு கண்டனம் ஆனால் இப்பகுதி நகராட்சியால் அங்கீகரிக்கப்பட்ட பகுதி இல்லை என்று தற்போதுவரை பாதாள சாக்கடை இணைப்பு வசதி செய்து தரவில்லை. இது தவிர சில வருடங்களாக விநியோகித்து வந்த குடிநீர் இணைப்பையும் துண்டித்துவிட்டனர். வடிகால் வசதி இல்லாததால் மழை காலங்களில் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது.
இதன் காரணமாக டெங்கு மலேரியா உள்ளிட்ட நோய்த்தொற்று ஏற்படுகிறது. மேலும், விஷ உயிரினங்கள் வருவதால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எங்களது குறைகளை நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை எடுத்துரைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தற்போது கருப்புக்கொடி கட்டியுள்ளோம். அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் வரையில் கருப்புக்கொடியை அகற்றப் போவதில்லை என தெரிவித்தனர்.