தேனி மாவட்டம் உத்தமபாளையம், போடி ஆகிய தாலுகாக்களில் ஆற்றுநீர் வழித்தடம் இல்லாத பகுதிகளின் பாசன தேவைக்காக 18ஆம் கால்வாய்த் திட்டம் உருவாக்கப்பட்டது. முல்லைப் பெரியாற்றின் தலைமதகுப் பகுதியான லோயர்கேம்ப்பிலிருந்து 40.80 கி.மீ. தூரத்தில் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், தேவாரம் சுத்தகங்கை வழியாக போடி வரையில் தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயரும்போது இந்தக் கால்வாய் வழியாக ஒருபோக பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
இந்தாண்டு ஆகஸ்ட் முதல் வாரத்தில் கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததையடுத்து, 18ஆம் கால்வாய் பகுதி பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கைவிடுத்தனர். அதனை ஏற்ற தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இன்று (அக். 07) முதல் 30 நாள்களுக்கு விநாடிக்கு 98 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் இன்று (அக். 07) லோயர்கேம்ப் அருகேவுள்ள முல்லைப் பெரியாற்றிலிருந்து 18ஆம் கால்வாய்க்குத் தண்ணீர் திறந்துவைத்தார். முன்னதாக பூஜை வழிபாடு செய்து, கால்வாயின் மதகுகளை ஆட்சியர் இயக்கிவைத்து, மலர்த்தூவி வரவேற்றார். அதனைத் தொடர்ந்து 18ஆம் கால்வாய் பாசன விவசாயிகளும் கால்வாயில் வெளியேறிய தண்ணீரை மலர்த்தூவி வரவேற்றனர்.