66ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பயனாளிகளுக்கு கடனுதவிகள், நலத்திட்டங்கள் வழங்கும் விழா தேனியில் நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான கேடயங்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், 551 பயனாளிகளுக்கு ரூ.7.49 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றது முழு வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டுக்கு உரிய நன்மைகள் கிடைக்கும். ரஜினி, கமல் இருவரும் மிகச்சிறந்த நடிகர்கள், தேர்தலில் இருவரும் இணைந்து பணியாற்றிய பிறகு இருவரது அரசியல் குறித்து பதிலளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.
அஜித் குறித்து ஓபிஎஸ்:
அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி, இயக்கங்களை ஆரம்பிக்கலாம் என்றார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அவரது வழியில் செயல்படும் அதிமுக அரசும் அவ்வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உள்ளது என்று கூறினார்.
உள்ளாட்சி மறைமுகத் தேர்தல் குறித்து ஓபிஎஸ் கருத்து மேலும், தமிழ்நாட்டில் எப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டாலும் அதை சந்திக்க அதிமுக தயாராகி வருகிறது என்றும், தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெறும் எனவும் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மறைமுக தேர்தலும், அதிமுகவின் ராஜ தந்திரமும்...!