தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வேர்ல்டு விஷன் இந்தியா சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தடுப்பு விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கு இன்று (அக்.24) நடைபெற்றது. பெரியகுளம் அருகேவுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கை திண்டுக்கல் சரக காவல் துறை துணை தலைவர் முத்துசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
தேனி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் தடுப்பு காவல் துறையினர், பாதுகாப்பு அலுவலர்களுக்கு இன்று (அக்.24) முழுவதும் இந்த பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த கருத்தரங்கில் பேசிய டிஐஜி, "7 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபடுகையில், அவர்களை குற்றவாளிகளாக பார்க்காமல், காவல் நிலையத்துக்கு அழைத்து வரும்போது, அன்போடும், பாசத்தோடும், பண்போடும் பார்த்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி விசாரணை செய்ய வேண்டும். சிறுவர்களை குற்றவாளிகளாக நடத்தினால் அவர்கள் வாழ்நாள் முழுவதும் இந்த சமுதாயத்தை குற்றவாளி கண்ணோட்டத்தோடு தான் பார்ப்பார்கள்" என்றார்.