உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியக் கண்காணிப்புக் குழுவினர் முல்லைப்பெரியாறு அணையில் நேற்று (பிப். 19) ஆய்வுசெய்தனர். பின்னர் அவர்கள் தேக்கடி ஆனவச்சால் பகுதியில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.
இதற்கு மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளரும், கண்காணிப்புக் குழுத் தலைவருமான குல்சன்ராஜ் தலைமை வகித்தார். மேலும் இதில் காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியம், மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளரும் துணைக் கண்காணிப்புக் குழுத் தலைவருமான சரவணக்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதைத் தொடர்ந்து கண்காணிப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "முல்லைப் பெரியாறு அணையின் பிரதான அணை, மண் அணை, பேபி அணை, கேலரி, சுரங்கப்பகுதிகள் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டு ஆய்வுசெய்ததில் திருப்தி அளிக்கிறது. அணை பலமாகவும், உறுதியாகவும் இருக்கிறது.
அணையின் நீர்தேக்க நடவடிக்கைக்கான விதி வளைவு இப்போது தமிழ்நாட்டுடன் கலந்தாலோசித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புப்படி மத்திய நீர்வள ஆணையம் இறுதி செய்துள்ளது. வரும் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய நீர்வரத்து குறித்த முன்னறிவிப்பு முறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.