தேனிமாவட்டத்தில் இன்று (அக்-20)உணவுப் பதப்படுத்துதல் மற்றும் ஜல்சக்தி துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளீதரன், ஓ.பி.ரவீந்திரநாத் எம்.பி., உள்பட பல்வேறு அரசுத் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் தேனி மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. கூட்டத்திற்குப் பின் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல், மத்திய அரசு வரும் 2024 ஆண்டிற்குள் அனைத்து வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு ஜல் ஜீவன் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இதற்காக நடப்பாண்டில் 60 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களுக்கும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் கொண்டு செல்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார். உணவு உற்பத்தியில் இந்தியா அடுத்த ஆண்டிற்குள் தன்னிறைவு பெற்று விளங்கும் என்றும் பிற நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு நம் நாடு வேளாண்மையில் முன்னேற்றம் அடையும் எனத் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைகிறதா என்பதை உறுதிப்படுத்தவே மத்திய அமைச்சர்கள் அனைத்து மாநிலங்களிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மாநில அரசு மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் தான்
மத்திய அரசு செயல்படுத்தும் அனைத்து திட்டங்களும் சாமானிய மக்களுக்கு எளிதில் கிடைக்கும் என்றார்.
மத்திய மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் இதையும் படிங்க:'தமிழ்நாட்டில் மூக்கையும் தலையையும் நுழைப்பேன், காலையும் வைப்பேன்' - தெலங்கானா ஆளுநர் தமிழிசை