தேனி: தேனி - மதுரை சாலையில் உள்ள பங்களாமேடு பகுதியில் நேற்று (மார்ச். 20) பிற்பகல் வந்த ஆட்டோ மீது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லாரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவில் பயணித்த தேனி ஜவஹர் நகரைச் சேர்ந்த கண்ணன், மணிகண்டன், பழனிசாமி ஆகிய மூன்று பேர் படுகாயமடைந்தனர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் குமார் மற்றும் பயணிகள் நாகராஜ், கணேசன் ஆகியோர் லேசான காயமடைந்தனர். விபத்துக்குள்ளான அனைவரும் மீட்கப்பட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
தலையில் பலத்த காயமடைந்த கண்ணன், மணிகண்டன் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவற்றில் கண்ணன் செல்லும் வழியிலும், மணிகண்டன் மதுரை அரசு மருத்துவமனைக்குச் சென்ற பிறகும் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
மற்ற நான்கு பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தேனி நகர் காவல் துறையினர் லாரி ஓட்டுநரான ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தைச் சேர்ந்த கொண்டாரெட்டி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆட்டோ மீது லாரி மோதி விபத்து இந்நிலையில் இருவரை பலிவாங்கிய விபத்தின் சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதில், மதுரை சாலையில் இருந்து தேனி நோக்கி வந்த ஆட்டோ பங்களாமேடு பகுதியில் பழைய டிவிஎஸ் ரோடு பிரிவில் திரும்புகிறது.
நிலை தடுமாறி ஆட்டோ கவிழும் போது, எதிரே தேனியில் இருந்து மதுரை சாலையில் வந்த லாரி ஆட்டோவின் மீது மோதி விபத்துக்குள்ளானது பதிவாகியுள்ளது.
இதையும் படிங்க:புதையல் பேராசையில் பல லட்சங்களைத் தொலைத்த அப்பாவிப் பெண்!