நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவிடம் சிபிசிஐடி காவலர்கள் நடத்திய விசாரணையில் மேலும் சில மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்துள்ளது தெரிய வந்தது.
அதனடிப்படையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவக்கல்லூரிகளில் படித்து வந்த அபிராமி , ராகுல், பிரவீன் ஆகிய மூன்று மாணவர்கள் சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இவர்களில் அபிராமி முறைப்படி நீட் தேர்வு எழுதியுள்ளார் என்பது தெரிந்ததும் அவர் விடுவிக்கப்பட்டார். ராகுல், பிரவீன் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள், அவர்களது தந்தையர் சரவணன், டேவிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களைத்தொடர்ந்து தருமபுரி மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த இர்ஃபான் என்கிற மாணவரும் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானதும் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று கூறப்படுகிறது.