தமிழ்நாடு - கேரள எல்லையில் அமைந்திருக்கும் தேனி மாவட்டத்தில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து சட்ட விரோதமாக கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனை, பதுக்கல் நடைபெறுவதாக, காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கஞ்சா கடத்தலை தடுத்த காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிலும் நடப்பாண்டில் மட்டும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் 62 பேர் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 8 பேர் நன்னடத்தை சான்று மீறியதாக, அவர்களது பிணை ரத்து செய்யப்பட்டது. மேலும் 5 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இருப்பினும் தேனி மாவட்டத்தில் கஞ்சா தொடர்பான குற்றங்கள் குறையவில்லை. இருப்பினும் கம்பம் பகுதியில் கஞ்சா கடத்தல், விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இதைத் தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின் பேரில் சார்பு ஆய்வாளர் திவான் மைதீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
போதைப் பொருள்களை மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிய தனிப்படையினருக்கு உதவியாக, மோப்ப நாய் வெற்றியும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் தொடர்புடையவர்களின் குடியிருப்பு பகுதிகளிலும், மாவட்டத்திலுள்ள வாரச்சந்தை, குமுளி, கம்பம்மெட்டு ஆகிய கேரள எல்லைப் பகுதிகளிலும் சோதனையை காவல்துறையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க:தேனியில் 3 நவீன போக்குவரத்து சிக்னல் திறப்பு