தேனி:தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மீனாட்சிபுரம் விளக்கு பேருந்து நிறுத்தத்தை பல ஆண்டுகளாக தனி நபர்கள் ஆக்கிரமித்து உணவகம் நடத்தி வந்துள்ளனர். இதனால் பேருந்து நிறுத்தத்திற்கு வரும் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மீனாட்சிபுரம் விளக்கு பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தை பொதுமக்கள் எங்கே இருக்கிறது என தேடி வந்தனர். கிணற்றைக் காணவில்லை என்ற வடிவேலு பட காமெடி பாணியில் பேருந்து நிறுத்தம் தெரியாத அளவிற்கு தனியார் உணவகமாக அது மாறி இருந்தது. தனிப்பட்ட நபர்கள் பேருந்து நிறுத்தத்தை ஆக்கிரமித்து உணவகமாக மாற்றி விளம்பரப் பலகையால் பேருந்து நிலையம் சுவடே தெரியாத அளவிற்கு மாற்றி அமைத்து இருந்தனர்.
மேலும், அரசு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து நிறுத்தம் எங்கே இருக்கிறது என தெரியாமல் முன்னும், பின்னும் பேருந்தை நிறுத்துவதால் பேருந்து எங்கு நிற்கும் என்று தெரியாமல் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் அவதிப்பட்டு வந்தனர். மேலும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
அதேநேரம், அந்தப் பேருந்து நிலையத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகளின் நிழற்குடையை மீண்டும் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருந்தது. இதனிடையே, இது குறித்து ஈடிவி பாரத் தமிழ்நாடு செய்தி தளத்தில் செய்தியாக பதிவு செய்யப்பட்டது.