தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள டி.சுப்புலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் பூர்வீக சொத்துக்கான பட்டாவில் விடுபட்ட தனது பெயரைச் சேர்க்க திம்மரசநாயக்கனூர் கிராம நிர்வாக அலுவலர் காளிதாசிடம் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். அப்போது பட்டாவில் பெயர் சேர்க்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது. அதன் பின்னர் நடைபெற்ற பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின் நடந்த பேரத்தில் 16 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் என முத்துப்பாண்டியிடம் அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முத்துப்பாண்டி இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். இதனையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறையினர் ரசாயணம் தடவிய ரூபாய் நோட்டுக்களை முத்துப்பாண்டியிடம் கொடுத்தனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட முத்துப்பாண்டி ரூ.16 ஆயிரம் கொண்டு வந்துள்ளதாக கிராம நிர்வாக அலுவலரிடம் தொலைபேசியில் கூறியுள்ளார். பணத்தை தனது உதவியாளர் குமாரிடம் கொடுத்தவிடும்படி கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் கூறியுள்ளார்.
முத்துப்பாண்டி 16 ஆயிரத்தை உதவியாளர் குமாரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரை கையும் களவுமாகப் பிடித்தனர். இதன் தொடர்ச்சியாக அங்கு வந்த திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் நாகராஜன், ஆய்வாளர் கீதா தலைமையிலான 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர், கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் நான்கு மணி நேரம் விசாரணை நடத்தினர்.
லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது லஞ்ச ஒழிப்புத்துறை காவல் துறை சோதனை நடத்தியது குறித்து தெரிந்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ் தலைமறைவாகியுள்ளார். இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலரின் உதவியாளரிடம் விசாரணை நடத்தி ஆவணங்களைக் கைப்பற்றிய காவல் துறையினர், லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் காளிதாஸ், உதவியாளர் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். உதவியாளர் குமாரை காவல் துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
மேலும், தலைமறைவாகவுள்ள கிராம நிர்வாக அலுவலர் காளிதாசை காவல் துறையினர் வலைவீசித் தேடி வருகின்றனர்.