தேனி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மூணாண்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார்(24), கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்து, பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் பணியாற்றி வந்தார்.
கடந்த 12ஆம் தேதி அதிகாலையில், பதிண்டா ராணுவ முகாமில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ் குமார் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் இன்று(ஏப்.14) காலை மதுரை விமான நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது. ராணுவத்தினர் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
பின்னர், யோகேஷ் குமாரின் உறவினர்கள், அவரது உடலை ஆம்புலன்ஸ் வாகனம் மூலம், சொந்த ஊரான தேனி மாவட்டம், மூணாண்டிபட்டிக்கு கொண்டு சென்றனர். அங்கு ரெங்கநாதர் கோவில் மைதானத்தில் கூடியிருந்த கிராம மக்கள் சார்பாக மலர் அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது வீட்டிற்கு ஊர்வலமாக கொண்டு சென்றனர். அவரது இல்லத்தில் உடல் வைக்கப்பட்ட பிறகு, அவரது உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். ராணுவ வீரர் யோகேஷ் குமார் உடலுக்கு, கம்பம் எம்.எல்.ஏ ராமகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.