தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பகுதியில் நேற்றிரவு காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக வந்த காரை பரிசோதித்ததில் அதில் வாள், வீச்சரிவாள்களுடன் அஜீத் ரஹ்மான், விக்னேஸ்வரன், ராஜேஷ், ஆனந்தன் மற்றும் ஜெயபிரபு ஆகிய ஐந்து பேர் இருந்துள்ளனர்.
அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பயங்கர ஆயுதங்களைக் கொண்டு வழிப்பறியில் ஈடுபட முயன்றதாக கூறியுள்ளனர். இதனிடையே முன்விரோதம் காரணமாக இந்த கும்பல் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக பாஜகவின் மீனவரணி மாநில செயலாளர் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இது குறித்து அவர் அளித்த புகாரில், போடிநாயக்கனூர் அடுத்துள்ள அமராவதி நகர் பகுதியில் வசித்து வரும் எனது வீட்டில், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் வீட்டின் கதவை தட்டி எனது தந்தை அய்யாநாதனிடம் தொழில் வரவு செலவு காரணமாக பார்த்திபனிடம் பேச வேண்டும், அவரை வெளியே அழைத்து வருமாறு கூறியுள்ளனர்.
நான் சோர்வாக உறங்கிக் கொண்டிருப்பதால் காலையில் வந்து சந்திக்குமாறு எனது தந்தை கூறியதால் அவர்கள் சென்றுள்ளனர். இதையடுத்து எனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்ததில், இரவில் வந்த கும்பல் கையில் ஆயுதங்களை மறைத்து வைத்துக்கொண்டு எனது தந்தையிடம் பேசியிருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அவர்கள் வந்த கார் பதிவெண்ணை ஆய்வு செய்ததில், எனது குடும்ப நண்பர் விக்னேஷ்வரனுக்குச் சொந்தமானது என தெரியவந்தது.
போடி ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் குடியிருக்கும் பாப்பா ராவுத்தரின் பேரனான அஜீத் ரஹ்மான் என்பவர், மத மோதலை ஏற்படுத்தும் விதமாக என்னிடம் பிரச்னை செய்து வந்தார். இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. நான் பாஜகவில் இணைந்தது பிடிக்கவில்லை. அவரது நண்பரும், எனக்கு குடும்ப நண்பருமான விக்னேஷ்வரனிடம் அஜீத் ரஹ்மான் பலமுறை முறையிட்டுள்ளார்
கூலிப்படையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் இந்நிலையில் எனது குடும்ப உறவு பெண் ஒருவரிடம் பழகிய விக்னேஷ்வரன் அவரை ஆபாசமாக வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி ரூ.10 லட்சம் பணத்தை பறித்துள்ளார். இந்த விபரம் அறிந்து விக்னேஷ்வரனின் தந்தையான கள்ளுப்பட்டி பாலுவிடம் எனது நண்பருடன் சரவணபாண்டியன் பேசியதில், 10 நாட்களில் பணத்தை திருப்பி தருவதாக தெரிவித்தார். இதனை அறிந்த விக்னேஷ்வரன் மற்றும் அஜீத் ரஹ்மான் இருவரும் அலைபேசியில் அழைத்து மிரட்டினார்கள். இந்த நிலையில்தான் அஜீத் ரஹ்மான் உதவியுடன் கூலிப்படை அமைத்து கொலை செய்வதற்காக எனது வீட்டிற்கு விக்னேஷ்வரன் அவரது காரில் ஆயுதங்களுடன் அழைத்து வந்திருக்கலாம் எனத் தெரிகிறது.
போடியில் கைது செய்யப்பட்ட கூலிப்படையினர் மேலும் வந்திருந்த கூலிப்படையினர், உத்தமபாளையம் வழக்கறிஞர் ரஞ்சித் கொலை வழக்கில் தொடர்புடையவர்களாவர். எனவே எனக்கு உயிர் பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போடி நகர் காவல்நிலையத்தில் ஐந்து பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.