தேனி:பெரியகுளம் கீழ வடகரை பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்களுக்காக உருவாக்கப்பட்ட சின்ன பூலாங்குளம் மற்றும் பெரிய- பூலாங்குளம் கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களுக்கு கும்பக்கரை அருவியில் இருந்து பிரித்து வரும் நீர் வாய்க்கால் மூலம் இந்த கண்மாய்களுக்கு வந்து சேருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் நீர் பிரித்து அனுப்புவதற்காக கட்டப்பட்ட தடுப்பணை உடைந்து முற்றிலும் சேதம் ஏற்பட்டது. தடுப்பணை உடைந்து ஓராண்டுக்கு மேலாக சீரமைக்கப்படாத நிலையில் கடந்த 15 நாள்களுக்கு முன்பாக பெய்த கனமழையிலும் இரண்டு குளத்திற்கும் நீர் செல்வதில் தடை ஏற்பட்டது.
மேலும், தொடர் கனமழையால் பெரியகுளம் பகுதியிலுள்ள அனைத்து குளங்களும் நீர் நிறைந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நேரத்தில் இந்த இரண்டு குளங்களுக்கு மட்டும் முற்றிலும் நீர்வரத்து இல்லாமல் காணப்படுகிறது.