தேனி: சபரிமலை ஐயப்பன் மற்றும் முருகன் கோயில்களுக்குச் செல்ல ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருப்பது வழக்கம். அந்த வகையில், கார்த்திகை முதல் நாளான இன்று (நவ.17), ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று, கேரளா சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்ல ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து, கார்த்திகை மாதம் முதல் நாளில் விரதம் தொடங்குவர். கார்த்திகை மாதம் முதல் நாளான இன்று முதல், 48 நாட்கள் சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் மண்டல பூஜை காலம் நடைபெறும்.
அந்த வகையில், தேனி மாவட்டம், சுருளி மலை புண்ணிய தலத்தில் கம்பம், உத்தமபாளையம், கூடலூர், அனுமந்தன்பட்டி, புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் முருக பக்தர்கள் சுருளி அருவிக்கு வந்து, மாலை அணிந்து விரதத்தைத் தொடங்கினர்.
அதனைத் தொடர்ந்து, அருவியில் ஐயப்பனுக்கு ஆராட்டும் நடைபெற்றது. பின்னர், சுருளிமலை ஸ்ரீ அய்யப்பசாமி கோயில், பூதநாராயணன் கோயில், சுருளி வேலப்பர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் குருசாமிகள் மூலம் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர்.
முன்னதாக சுருளிமலை ஸ்ரீ அய்யப்பசாமி கோயில் உற்சவருக்கு குருசாமி கதிரேசன், டிரஸ்டி பொன்காட்சிக் கண்ணன் தலைமையில் 9ஆம் ஆண்டு ஆராட்டு நடைபெற்றது. இதையடுத்து விரதமிருந்த பக்தர்கள் கருப்பு, காவி உடை அணிந்து, குருசாமி கையால் மாலை அணிந்து சபரிமலை யாத்திரைக்கான விரதத்தைத் தொடங்கினர்.